இந்தியா. அதிலும் தமிழ்நாடு, சென்னை மாநகரம், மிகவும் குப்பையாக இருக்கிறது. என்ன செய்வது?இது நம் பலரிடம் உள்ள மனக்குறை.
நாம் அனைவரும் கண்டகண்ட இடங்களில் குப்பையை போட்டு விட்டு, நம்மை நாமே, கேட்டுக்கொள்ளும் கேள்வி. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அது தான் உண்மையும் கூட.
சிங்கப்பூரைப் பாருங்கள் அழகு. நியுஷெர்சியைப் போய்ப் பாருங்கள். ஒரு தூசு, தும்பு கூட உண்டா! என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். உண்மை தான். அங்கே நீங்கள் தூசு தும்பை, தெருவில் போடுவதில்லை. ஆனால் இங்கே நீங்கள், விமானத்தை விட்டு இறங்கியவுடன், சாக்லேட்டைச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டுக் சுற்றி இருந்த பேப்பரை, குப்பைத் தொட்டியிலா கொண்டு போய்போட்டீர்கள்!நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள். அப்படியே, நைசாக, நின்ற இடத்திலேயே, போட்டு விட்டு வந்திருப்பீர்கள். அந்த இடம் ஏர்போர்ட்டின் அரைவல் ஹாலாக இருந்தாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட்டிருக்க மாட்டோம். ஏன் இந்த நிலைமை.
சிங்கப்பூரிலும் தினமும் ஊர் சுத்தம் செய்யப்படுகிறது. நம் ஊரிலும், சென்னை கார்ப்பொரேஷன் தினமும் தெருக்களைக் கூட்டிச் சுத்தம் செய்கிறார்கள். குப்பையை அள்ளிப் போகிறார்கள். அதுவும் நியுஜெர்சியில் உபயோகப்படுத்தும், அதே மாதிரியான குப்பை லாரியில் அள்ளிப் போகிறார்கள். அப்படியிருந்தும், இந்த நிலைமைக்கு யார் காரணம். ஆட்சியாளர்களா!இல்லையென்றால் அரசாங்கமா?
இவர்கள் யாருமே இதற்கு காரணம் இல்லை. இந்த நிலைமைக்கு காரணம் நாம் தான். நாம் மாறினால் தான், இந்த ஊர் சிங்கப்பூர் போல் மாறும்.
